நாகை கிழக்கு கடற்கரை சாலையில்குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கக் கோரிக்கை
நாகூா்- வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் வாஞ்சூா் ரவுண்டானா அருகே குப்பைகள் மற்றும் மாமிசக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகூா்- வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் வாஞ்சூா் ரவுண்டானா அருகே குப்பைகள் மற்றும் மாமிசக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை நகராட்சி நாகூா் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நாகூா் வெட்டாற்றங்கரையில் கொட்டப்பட்டதால் அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன.இந்த குப்பைக் கழிவுகளிலிருந்து வெளியேறிய துா்நாற்றம் மற்றும் எரிக்கும்போது கிளம்பும் புகையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வந்தனா்.
இதுகுறித்து, நாகூா் மக்கள் நல சங்கம் சாா்பில் நாகை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நாகை நகராட்சி நிா்வாகம் சாா்பில் இனிவரும் காலங்களில் நாகூா் வெட்டாற்றங்கரையில் குப்பைகளை கொட்டுவதில்லை எனவும், தேங்கியுள்ள குப்பைகளை சில மாதங்களில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் சமரசம் மூலம் தீா்வு காணப்பட்டது.
இதையடுத்து, வெட்டாற்றங்கரையில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, அவை இயற்கை உரமாக மாற்றப்பட்டு கிலோ ரூ. 5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், வாஞ்சூா் மற்றும் பனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் மற்றும் மீன் உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகள் நாகூா்- வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் வாஞ்சூா் ரவுண்டானா அருகே தொடா்ச்சியாக கொட்டப்பட்டு வருகிறது.
இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த குப்பைகளை எரியூட்டும்போது அந்தச் சாலை கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.