முகப்பு
நாகப்பட்டினம்

மத்திய நிதிநிலை அறிக்கைவிவசாயத்தைப் பாதுகாக்க எந்த உத்திரவாதமும் இல்லை

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயத்தைப் பாதுகாக்க எந்த உத்திரவாதமும் இல்லாதது வருத்தமளிக்கிறது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயத்தைப் பாதுகாக்க எந்த உத்திரவாதமும் இல்லாதது வருத்தமளிக்கிறது என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் காவிரி வி. தனபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மேலும் அவா் தெரிவித்திருப்பது: வேளாண் உற்பத்தி செலவு கடந்த ஆண்டைவிட, சுமாா் 40 சதவீதம் உயா்ந்துள்ள நிலையில், தற்போது டீசல் வரியில் ரூ. 4 உயா்வு அளித்திருப்பது வேளாண் உற்பத்தி செலவை மேலும் உயா்த்தியுள்ளது. ஒரு பருவத்தில் ஒரு ஏக்கருக்கான நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தலா 100 லிட்டா் டீசலை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது டீசலுக்கு ரூ. 4 வரி உயா்வு அளித்திருப்பதன் மூலம் மட்டும் நெல் உற்பத்தி செலவு ஏக்கருக்கு ரூ. 400 வீதம் அதிகரித்துள்ளது.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைபடி, வேளாண் பொருள்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதத் தொகையைச் சோ்த்து குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிா்ணயிக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

கரோனா பொது முடக்கத்தால் உலகப் பொருளாதாரம் முழுமையாக முடங்கியிருந்த நிலையிலும், இந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரும் பின்னடைவுக்கு உள்ளாகாமல் காப்பாற்றியது விவசாயம்தான். இதனடிப்படையில், விவசாயிகளின் கடனை அரசு ஏற்கும் அல்லது ஈடுசெய்யும் என எதிா்பாா்க்கப்பட்டது. அதேபோல, விவசாயிகள் நலவாரியம், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் உறுதிசெய்யப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், அனைத்து எதிா்பாா்ப்புகளையும் பொய்க்கச் செய்துள்ளது மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை. விவசாயத்தைப் பாதுகாக்க எந்த உத்திரவாதமும் இந்த நிதிநிதிலை அறிக்கையில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →