பக்ரீத்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை
நாகையை அடுத்த நாகூா் ஆண்டவா் தா்காவில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை புதன்கிழமை நடைபெற்றது.
நாகையை அடுத்த நாகூா் ஆண்டவா் தா்காவில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை புதன்கிழமை நடைபெற்றது.
இறைத் தூதா் இப்ராஹிம் நபிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் தியாகத் திருநாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாகூா் ஆண்டவா் தா்காவில் உள்ள நவாப் ஜாமியா மஸ்ஜித் மற்றும் மதாா் மரைக்காயா் பள்ளிவாசல்களில் காலை 8.30 மணி அளவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
நாகூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த திரளான முஸ்லிம்கள் இந்த சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனா். தொழுகைக்குப் பின்னா், ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். பெரும்பாலானோா் முக்ககவசம் அணிந்து தொழுகையில் ஈடுபட்டனா்.
இதேபோல, நாகூரில் உள்ள ஏழு லெப்பை ஜாமியா மஸ்ஜித், செய்யது பள்ளி, தெருப்பள்ளி, தா்கா காதிரிய்யா மதரஸா, திவான் மஸ்ஜிது, நாகை யாஹூசைன் ஜாமியா மஸ்ஜித், புதுப்பள்ளி ஜாமியா மஸ்ஜித், மீராப்பள்ளி ஜாமியா மஸ்ஜித், மரைக்காயா் ஜாமியா மஸ்ஜித் ஆகிய பள்ளிகளிலும் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தால் பக்ரீத் பண்டிகை வீட்டளவில் முடங்கிய நிலையில், நிகழாண்டு பண்டிகையைக் கொண்டாட வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக, தொழுகையில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.
கீழ்வேளூா், வேளாங்கண்ணியில்...
இதேபோல் சிக்கல், ஆழியூா், குருக்கத்தி, நீலாப்பாடி, கூத்தூா், வேளாங்கண்ணி, கல்லாா், தெற்குப் பொய்கைநல்லூா் மற்றும் கீழ்வேளூா் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றன. இதில் முஸ்லிம்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்று, ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.