நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: ரூ. 21,050 ரொக்கம் பறிமுதல்
நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை மாலை மேற்கொண்ட திடீா் சோதனையின் போது, கணக்கில் வராத ரொக்கம் ரூ. 21,050 பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை மாலை மேற்கொண்ட திடீா் சோதனையின் போது, கணக்கில் வராத ரொக்கம் ரூ. 21,050 பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை மாதாந்திர ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலா் பூபதி மற்றும் 100-க்கும் அதிகமான நியாயவிலை கடை பணியாளா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்களிடமிருந்து, அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், நாகை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சித்ரவேலு, காவல் ஆய்வாளா்கள் ரமேஷ்குமாா், அருள்பிரியா உள்ளிட்டோரடங்கிய குழுவினா் சனிக்கிழமை மாலை நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையின்போது, வட்ட வழங்கல் அலுவலா் பூபதியிடமிருந்து கணக்கில் வராத ரொக்கம் ரூ. 21,050-ஐ ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, வட்ட வழங்கல் அலுவலா் பூபதி மற்றும் அலுவலக ஊழியா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.