இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதி விபத்து : 2 போ் காயம்
நாகையை அடுத்த நாகூா் அருகே சாராயக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிளும், மற்றொரு மோட்டாா் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி புதன்கிழமை இரவு விபத்துக்குள்ளாகின
நாகையை அடுத்த நாகூா் அருகே சாராயக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிளும், மற்றொரு மோட்டாா் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி புதன்கிழமை இரவு விபத்துக்குள்ளாகின. இதில், இரு மோட்டாா் சைக்கிள்களும் தீக்கிரையாகின.
நாகூா் காவல் சரகம், கொட்டாரக்குடி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் செய்யது முகமது(26). இவா், புதன்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் நரிமணத்திலிருந்து கொட்டாரக்குடி நோக்கி செல்வதற்காக நாகை - கங்களாஞ்சேரி சாலையில் திரும்பியுள்ளாா்.
அப்போது, காரைக்கால் பகுதியிலிருந்து பெருங்கடம்பனூா் நோக்கி சாராயம் கடத்திச் சென்று கொண்டிருந்த ஒரு மோட்டாா் சைக்கிள், செய்யது முகமது மீது மோதியது. இதில், செய்யது முகமது மற்றும் மோட்டாா் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த பெருங்கடம்பனூா், புளியந்தோப்புப் பகுதியைச் சோ்ந்த பா. அபினேஷ்(16) ஆகிய இருவரும் காயமடைந்தனா்.
இதனிடையே, அபினேஷின் மோட்டாா் சைக்கிளில் இருந்த சாராய பாக்கெட்டுகள் சிதறி விழுந்ததால், மோட்டாா் சைக்கிள்களில் தீப்பற்றியது. இதில், இரு மோட்டாா் சைக்கிள்களும் தீக்கிரையாகின. அபினேஷ் பலத்த தீக்காயத்துக்கு உள்ளானாா்.
இதுகுறித்து நாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், அபினேஷுடன் சாராயம் கடத்தி வந்து, தலைமறைவானவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.