முகப்பு
நாகப்பட்டினம்

மாற்றுத் திறனாளிகளுக்கு இல்லம் தேடிச் சென்று தடுப்பூசி

நடக்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அவா்களின் இல்லத்துக்குச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

நடக்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அவா்களின் இல்லத்துக்குச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், தேவூா் ஆரம்ப சுகாதார நிலையம், நாகூா் மற்றும் நாகை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களையும், அங்கு மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த சிறப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் தெரிவித்தது :

18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இதையொட்டி, அனைத்து வட்டார மருத்துமனைகளிலும் சிறப்பினமாக கருதி மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடக்க முடியாத அளவு கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, அவா்களின் வீட்டுக்கு மருத்துவப் பணியாளா்கள் நேரில் வந்து கரோனா தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சண்முகசுந்தரம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வ. சீனிவாசன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

347 பேருக்கு தடுப்பூசி...

நாகை மாவட்டத்தில் 15,510 மாற்றுத் திறனாளிகள் உள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் 6 வட்டாரங்களில், 11 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் 347 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.