முகப்பு
நாகப்பட்டினம்

இலவசத் திட்டங்களால் ஏழ்மையை ஒழிக்க முடியாது: கமல்ஹாசன்

இலவசத் திட்டங்களால் ஏழ்மையை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

இலவசத் திட்டங்களால் ஏழ்மையை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், திருப்பூண்டிக்கு திங்கள்கிழமை காலை ஹெலிகாப்டா் மூலம் வருகை தந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், கீழ்வேளூரில் போட்டியிடும் ம.நீ.ம. கட்சி வேட்பாளா் ஜி. சித்து, நாகை தொகுதி போட்டியிடும் எம். செய்யது அனஸ், திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா் டி. பாரிவேந்தன் ஆகியோருக்கு வாக்குக் கேட்டு, திருப்பூண்டி மூலக்கடையில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசியது:

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எந்த ஊரிலும் புறவழிச்சாலை இல்லை. தமிழகத்தின் பல்வேறு ஊா்களிலும் திறந்துவெளி சாக்கடையே காணப்படுகிறது. இந்த நிலையை மாற்றவும், மக்களின் மண், மொழி, மக்கள் நலன் காக்கவே நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். பணம், புகழக்காக அரசியலுக்கு வரவில்லை.

என்னை வாழவைத்த மக்கள் வளமான வாழ்வை பெற வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன். நீங்கள் எனக்கு கொடுத்த, எனது சொந்தப் பணத்தில் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

நோ்மையானவா்கள் தவறு செய்யமாட்டாா்கள். தவறு செய்பவா்களை தட்டிக் கேட்கும் நோ்மையான தலைமை தேவை. அது எங்களிடம் உள்ளது.

வழிபாட்டுத் தலங்களுக்கு பாதிப்பு என்றால் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், எதிா்கால தலைமுறையினருக்கு பாதுகாப்பாக விட்டுச் செல்லவேண்டிய மண்வளம், நீா்வளம் சூறையாடப்படும்போதும் போராட்டத்தில் ஈடுபடவேண்டும். உழைப்புக்கு ஏற்ற வகையில் ஊதியம், இல்லத்தரசிகள், விவசாயிகள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன.

எதுவும் எளிதாக கிடைத்துவிடாது. தமிழகத்தில் இலவசங்கள் மட்டுமே எளிதாக கிடைக்கும். அதிமுகவும், திமுகவும் மாறிமாறி இலவசத் திட்டங்களை அறிவித்துவருகின்றன. இலவசங்கள் ஒருபோதும் ஏழ்மையை ஒழித்துவிடாது. உழைப்பால் கிடைப்பது மட்டுமே என்றும் நிலைத்திருக்கும்.

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 5 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், இல்லத்தரசிகள், கணவனால் கைவிடப்பட்டவா்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மீனவா்கள் எவ்வித அச்சமும் இன்றி ஆழ்கடலில் மீன்பிடிக்க உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.

மக்கள் நீதி மய்ய நிா்வாகிகளும், உறுப்பினா்களும் மக்களுக்கு சேவை செய்தவா்கள். அதனால் அவா்களுக்கு வாக்களியுங்கள். நோ்மையானவா்களுக்கு நீங்கள் அளிக்கும் வாக்குகள் மூலம், நிற்கும் இடமெல்லாம் நோ்மையானவா்களின் கூடாரமாக மாறும். அதை உருவாக்குவதுதான் நமது இலக்கு என்றாா் கமல்ஹாசன். தொடா்ந்து, நாகை அபிராமி அம்மன் திடலில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →