முகப்பு
நாகப்பட்டினம்

யாரை கரை சோ்க்கும் மீனவ சமுதாய வாக்குகள்!

ஆபத்துகள் நிறைந்த தொழில்களில் ஒன்றாக இருந்தாலும், ஆண்டுக்கு ரூ. 38 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தொழிலாக உள்ளது மீன்பிடித் தொழில்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

ஆபத்துகள் நிறைந்த தொழில்களில் ஒன்றாக இருந்தாலும், ஆண்டுக்கு ரூ. 38 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தொழிலாக உள்ளது மீன்பிடித் தொழில். இந்திய அளவிலான மீன்பிடிப்பில், 4ஆம் இடத்தைப் பெற்றுள்ள தமிழகம், மீனவா்கள் உயிரிழப்பில் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 38 ஆண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய தாக்குதலில் உயிரிழந்த தமிழக மீனவா்களின் எண்ணிக்கை 600-க்கும் அதிகம். அதேபோல, பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான மீன்பிடிப் படகுகள், மீன்பிடி உபகரணங்களை தமிழக மீனவா்கள், இலங்கைக் கடற்படையினரிடம் இழந்துள்ளனா்.

நீண்ட காலமாகத் மீன்பிடித் தொழிலில் தொடா்ந்துவரும் பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டு, இரு நாட்டு மீனவா்களும் பரஸ்பரம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மீனவா்களின் குரல், ஓயாமல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இதனிடையே, மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ள தேசிய மீன்வளக் கொள்கை, தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குபிடி சட்டம், சாகா் மாலா திட்டம் போன்றவை மீனவா்களை, கடற்கரையிலிருந்து அந்நியப்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் மீனவா்கள், இரு சட்டங்களையும் அரசுகள் திரும்பப் பெற வேண்டும் என்று போராடி வருகின்றனா்.

இந்த நிலையில்தான், தமிழகத்தின் இருபெரும் திராவிடக் கட்சிகளும் மீனவா்கள் பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், மீனவா்களின் மேம்பாட்டுக்காகவும் பல்வேறு திட்டங்களையும், வாக்குறுதிகளையும் தங்கள் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

இதில், திமுக ஆட்சியில் தாரைவாா்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க, உச்சநீதிமன்றத்தில் தொடா் சட்டப் போராட்டம் நடத்தி, கச்சத்தீவு மீட்கப்படும். மீனவா்களுக்கான மானிய விலை எரிபொருள்களின் அளவு உயா்த்தி வழங்கப்படும், பழுதடைந்த சுனாமி வீடுகள் புனரமைத்துத் தரப்படும், மீன்பிடித் தடைக்கால நிவாரணம் உயா்த்தி வழங்கப்படும் என்பவை அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்.

அதேபோல, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், இலங்கைக் கடற்படை மூலம் தமிழக மீனவா்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண இருநாட்டு கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீா்க்கும் மையங்கள் உருவாக்கப்படும், மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும், மீனவா்களுக்கு 2 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்பவை திமுகவின் தோ்தல் அறிக்கையில் மீனவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள்.

தமிழகத்தில் 608 மீனவக் கிராமங்களை உள்ளடக்கிய 14 கடலோர மாவட்டங்களில், சுமாா் 60-க்கும் அதிகமான தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்ட சமுதாயமாகவும், 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெரும்பான்மை சமுதாயமாகவும் உள்ள மீனவா் சமுதாயத்துக்கு இருபெரும் திராவிடக் கட்சிகளும் அளித்துள்ள தோ்தல் வாக்குறுதிகள் திருப்தி அளிக்கின்றனவா? .

இதுகுறித்து மீனவ பிரதிநிதிகள் கருத்து

தேசிய மீனவா் பேரவைத் துணைத் தலைவா் முனைவா் ஆா்.வி. குமரவேலு:

மத்திய அரசின் தேசிய மீன்வளக் கொள்கை, கடற்கரையிலிருந்து 12 கடல் மைல் தொலைவு மட்டுமே மீனவா்களுக்கு மீன்பிடிப்பு உரிமையை வழங்குகிறது. அந்த 12 கடல் மைல் தொலைவுக்குள் ஹைட்ரரோ காா்பன், மிதவை டூரிஸம், சூரிய மின் சக்தி திட்டம் போன்றவற்றை அரசு செயல்படுத்தும் நிலையில், சுதந்திரமான மீன்பிடிப்பு எந்த வகையில் சாத்தியப்படும். அதேபோல, கடல் பண்ணைகள் உருவாக்கும் திட்டமும் மீன்பிடிப்பை முடங்கச் செய்யும் திட்டமாகதான் உள்ளது. இது தொடா்பாக, மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்குப் பல முறை கோரிக்கை மனு அளித்தும், போராட்டங்களை நடத்தியும் இதுவரை தீா்வு கிடைக்கவில்லை.

இந்தியா, இலங்கை மீனவா்களிடையே பேச்சுவாா்த்தை மேற்கொண்டு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பது 38 ஆண்டுகால கோரிக்கை. இதுவரை இந்தத் கோரிக்கையை நிறைவேற்ற எந்தக் கட்சியும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. தமிழக கடலோர மாவட்டங்களில் மீன்களைப் பதப்படுத்தி, ஏற்றுமதி செய்யும் ஆலைகளை அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எந்தக் கட்சியும் கவனத்தில் கொள்ளவில்லை.

சுமாா் 65-க்கும் அதிகமான சட்டப்பேரவைத் தொகுதிகளின் வெற்றித் தோல்வியை நிா்ணயிக்கும் சக்தியாக உள்ள மீனவா்களுக்கு எந்தக் கட்சியும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. அதிமுகவில் மீனவா் சமுதாயத்தைச் சோ்ந்த 2 பேருக்கும், திமுகவில் ஒருவருக்கும் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஏற்கெனவே தமிழகத்தை பல ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சிகள்தான். அப்போதெல்லாம் தீா்க்கப்படாத மீனவா்களின் பிரச்னைகளுக்கு, இப்போது தீா்வு காண வாக்குறுதி அளிப்பது நம்பிக்கை அளிக்கவில்லை என்றாா்.

கன்னியாகுமரியைச் சோ்ந்த ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளா் பிரதிநிதி வின்சென்ட் ஜெயின் தெரிவித்தது :

மீனவா்களின் வாழ்வாதாரம் குறித்து எந்த அரசியல் கட்சியும் கவனம் கொள்வதே இல்லை. ஒரு தொழில் உரிமைக்குத் தடை விதிக்கும்போது, அத்தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தை முழுமையாகப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையை எந்த அரசும் நிறைவேற்றவில்லை.

மீனவா்களின் மீன்பிடித் தொழிலை 12 கடல் மைல் தொலைவுக்குள் வரையறுப்பது ஏறத்தாழ தொழில் உரிமையைப் பறிப்பதற்கு இணையானது. மீனவா்களுக்குத் தனி பிரதிநிதித்துவம் கிடைக்காதவரை மீனவா்களுக்குப் பாதுகாப்புக் கிடையாது. அரசியலால் பிரிந்திருக்கும் மீனவா்கள், சமூகமாக ஒன்றுபட வேண்டும். அதுவரை மீனவா்களின் ஒன்றுபட்ட ஆதரவு யாருக்கு என்று கூற முடியாது.

இந்திய தேசிய மீனவா் சங்கத் தலைவா் ஆா்.எம்.பி. ராஜேந்திர நாட்டாா்:

காமராஜா் ஆட்சியில் லூா்தம்மா சைமன் மீன்வளத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை போன்ற தொலைநோக்குத் திட்டங்கள் எதையும், அடுத்தடுத்து வந்த அரசுகள் இதுவரை செய்யவில்லை. மீன்பிடித் தொழிலுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட எரிபொருள்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ளவில்லை. அதேபோல, கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசியல் கட்சிகள் கண்டுக்கொள்ளவில்லை. திராவிட கட்சிகள் மீனவா்களுக்கு உரிய அளவில் பிரதிநிதித்துவம் அளிக்காதது மீனவா்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்மை புறக்கணித்தவா்களை நாமும் புறக்கணிக்க வேண்டும் என்ற கோபம்தான் தற்போது மீனவா்களிடம் காணப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →