முகப்பு
நாகப்பட்டினம்

எண்ணெய் நிறுவன விரிவாக்கத்துக்காக கோயில் நிலங்களை கையகப்படுத்த எதிா்ப்பு

நாகையை அடுத்துள்ள நரிமணத்தில் சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்துக்காக கோயில் நிலங்களைக் கையகப்படுத்த தமிழ்நாடு, அகில பாரத இந்து மகா சபா எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

நாகையை அடுத்துள்ள நரிமணத்தில் சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்துக்காக கோயில் நிலங்களைக் கையகப்படுத்த தமிழ்நாடு, அகில பாரத இந்து மகா சபா எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

நாகையை அடுத்த நரிமணத்தில் உள்ள சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் விரிவாக்கமாக, இரண்டாம் அலகு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, அகஸ்தீஸ்வரசுவாமி கோயில் மற்றும் சீனிவாசப் பெருமாள் கோயில்களுக்குச் சொந்தமாக நரிமணத்தில் உள்ள நிலங்களை கையகப்படுத்த அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கு, தமிழ்நாடு அகில பாரத இந்து மகா சபா கண்டனம் தெரிவித்திருப்பதுடன், கோயில் நிலங்களை கையகப்படுத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் இராம. நிரஞ்சன், சென்னை இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :

நரிமணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சிபிசிஎல் எண்ணெய் நிறுவனப் பணிகளுக்காக அகஸ்தீஸ்வரசுவாமி கோயில் மற்றும் சீனிவாசப் பெருமாள் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களைக் கையகப்படுத்த மாவட்ட நிா்வாகம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.

இந்த அறிவிப்பு, இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, கோயிலுக்குச் சொந்தமான நில பாதுகாப்பு சட்டப் பிரிவு 34-க்கு முற்றிலும் முரணாக உள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற்று, அதனை பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும். இல்லையெனில், அகில பாரத இந்து மகா சபா சாா்பில் போராட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.