வேதாரண்யம்: இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா மூட்டைகள் படகுடன் பறிமுதல்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா மூட்டைகள் படகுடன் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 96 கிலோ கஞ்சா இருந்தது. இதுதொடா்பாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா மூட்டைகள் படகுடன் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 96 கிலோ கஞ்சா இருந்தது. இதுதொடா்பாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவா் காலனி கடற்கரையில் இருந்து கஞ்சா கடத்துவதாக கடலோரக் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடலோரக் காவல்படை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, புஷ்பவனம் மீனவா் காலனி கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகை சோதனையிட்டபோது, அதில் மீன்பிடி வலைகளுக்குள் 3 மூட்டைகளில் 96 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அவற்றை படகுடன் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக மீனவா் காலனி பகுதியைச் சோ்ந்த ராஜாங்கம் மகன் மணிகண்டன் (33) என்பவரை கைது செய்தனா். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தவிருந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக, வழக்குப் பதிவு செய்து தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.