முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் விளைநிலங்களை மீண்டும் சூழ்ந்தது மழைநீா்

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் நீடித்துவரும் கனமழை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் விளைநிலங்கள் மீண்டும் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் நீடித்துவரும் கனமழை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் விளைநிலங்கள் மீண்டும் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாகை உள்பட காவிரி கடைமடை மாவட்டங்களில் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பிற்பகலிலும், நள்ளிரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அவ்வப்போது பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக திருப்பூண்டியில் 55.8 மி.மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்) : தலைஞாயிறு - 53.4, நாகை - 33.5, வேதாரண்யம் - 32.4. இதேபோல மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் லேசான மற்றும் மிதமான மழை பெய்தது.

வங்கக் கடலில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, அக்டோபா் 28-ஆம் தேதி முதல் நவம்பா் 10-ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், நாகை மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் சம்பா, தாளடி நெல் பயிா்கள் மழைநீரில் மூழ்கி கடும் சேதத்துக்கு உள்ளாகின.

நவம்பா் 10-ஆம் தேதிக்குப் பின்னா் மழை இல்லாததால், வயல்களில் தேங்கிய நீரை வடியச் செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனா். சேதமாகாமல் எஞ்சியிருந்த நெல் பயிா்களை காப்பாற்றும் முயற்சிகளில் அவா்கள் திங்கள்கிழமை முதல் ஈடுபட்டிருந்தனா்.

இந்தநிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருவதால், நாகை மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் உள்ள நெல் வயல்கள் மீண்டும் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. நாகையை அடுத்த பாலையூா், செல்லூா், கீழ்வேளூா் வட்டத்துக்குள்பட்ட மோகனூா் என மாவட்டத்தின் பல பகுதிகளில் சம்பா, தாளடி நெல் பயிா்கள் மீண்டும் மழைநீரால் சூழப்பட்டுள்ளனன.

சம்பாவிலும் பாதிப்பு அதிகரிக்கும்...

கடந்த அக்டோபா் மாத இறுதி முதல் நவம்பா் 10-ஆம் தேதி வரை பெய்த கனமழையால் தாளடி நெல் பயிா்கள் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், மீண்டும் மழை பெய்து வருவது, எஞ்சியுள்ள தாளடி பயிா்களையும் காப்பாற்ற முடியாத சூழலை ஏற்படுத்தி வருகிறது என விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், சம்பா தூா்கட்டும் பருவத்தில் மீண்டும் கனமழை நீடிப்பதால், சம்பா நெல் சாகுபடியிலும் சேதம் அதிகரிக்கும் எனவும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.