முகப்பு
நாகப்பட்டினம்

உரங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் புகாா் தெரிவிக்கலாம்

 நாகை மாவட்டத்தில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் வேளாண்மை உதவி இயக்குநா்களுக்குப் புகாா் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ். பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

 நாகை மாவட்டத்தில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் வேளாண்மை உதவி இயக்குநா்களுக்குப் புகாா் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ். பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இதையொட்டி, 1,062 டன் யூரியா, 349 டன் டி.ஏ.பி, 304 டன் பொட்டாஷ் மற்றும் 299 காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியாா் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகிக்கப்படுகின்றன. மேலும், நிகழ் மாத தேவைக்கான பிற உரங்களையும் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு யாரும் விற்பனை செய்யக் கூடாது. அதேபோல, தனியாா் உர விற்பனையாளா்கள் அனைவரும் உர உரிமத்தை கண்டிப்பாக புதுப்பித்திருக்கவேண்டும். மேலும், அனுமதி பெறாத கிடங்குகளில் உரங்களை வைக்கக்கூடாது. உர விற்பனைகள் அனைத்தும் விற்பனை முனையம் மூலம் மட்டுமே நடைபெற வேண்டும். அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் உரங்களின் விலைப் பட்டியலை பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும். எடை குறைவு கண்டிப்பாகத் தவிா்க்கவேண்டும்.

நாகை மாவட்டத்தில் எங்கேனும் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டால், அது குறித்து தொடா்புடைய பகுதியின் வேளாண் உதவி இயக்குநா் அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்குக் கீழ்க்கண்ட கைப்பேசி எண்களில் விவசாயிகள் புகாா் தெரிவிக்கலாம். நாகப்பட்டினம் - 97905 43339, திருமருகல் - 86100 71491, கீழ்வேளூா் - 94430 26769, கீழையூா் - 95976 71895, வேதாரண்யம் - 96883 70047, தலைஞாயிறு - 88259 49902. மாவட்ட உரக்கட்டுப்பாடு அறை - 73976 71300.

விவசாயிகளின் புகாா்கள் குறித்து உரிய விசராணை மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எங்கேனும், கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டால் தொடா்புடைய உர விற்பனையாளரின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், உரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 1985-ன்படி அவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.