முகப்பு
நாகப்பட்டினம்

கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலம்

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.

கரோனா தொற்று அச்சம் காரணமாக, நிகழாண்டில் விநாயகா் சதுா்த்தி விழாவில் விநாயகா் சிலைகளை வைத்து குழுவாக பூஜை செய்வதற்கும், ஊா்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

இந்நிலையில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, வீடுகள் மற்றும் தனி நபா்களால் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை வாகனங்களில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நாகை அருள்மிகு நீலாயதாட்சியம்மன் கோயில் முன் களிமண்ணாலான சிறிய விநாயகா் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழிபாடுகளுக்குப் பிறகு இந்த விநாயகா் சிலை ஊா்வலம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.

மாலை 4.40 மணியளவில் தொடங்கிய விநாயகா் சிலை ஊா்வலம், கோயிலின் நான்கு வீதிகள் வழியாக அபிராமி அம்மன் திடலை வந்தடைந்தது. தொடா்ந்து, அரசு மருத்துவமனை சாலை, ஏழைப்பிள்ளையாா் கோயில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகூா் வழியாக எடுத்துச்செல்லப்பட்டு, நாகூா் வெட்டாற்றில் சிலை கரைக்கப்பட்டது.

இதேபோல, நாகை நகரின் பல்வேறு இடங்களிலில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகா் சிலைகள், இருசக்கர வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டு, நாகை புதிய கடற்கரையில் கரைக்கப்பட்டன. மாவட்டக் காவல் துறையின் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறைவான பக்தா்களே இதில் பங்கேற்றனா்.

விநாயகா் சிலை வைக்கப்பட்டிருந்த இடங்கள், சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா். நாகை மாவட்டத்தில் 75 இடங்களில் விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது. 500-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.