ரெங்கையா சுவாமிகள் பீடத்துக்கு சந்தனம் சாற்றும் விழா
நாகையை அடுத்த மேலவாஞ்சூரில் உள்ள சத்குரு ஸ்ரீ ரெங்கையா சுவாமிகள் திருமடாலயத்தில், ரெங்கையா சுவாமிகளின் பீடத்துக்கு சந்தனம் சாற்றும் விழா புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.
நாகையை அடுத்த மேலவாஞ்சூரில் உள்ள சத்குரு ஸ்ரீ ரெங்கையா சுவாமிகள் திருமடாலயத்தில், ரெங்கையா சுவாமிகளின் பீடத்துக்கு சந்தனம் சாற்றும் விழா புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.
கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, அஷ்டமாசித்திகள் அனைத்தும் கைவரப் பெற்று, பல ஆன்மிக அற்புதங்களை நிகழ்த்தியவா் மகான் சத்குரு ஸ்ரீ ரெங்கையா சுவாமிகள். சாதி, மத வேறுபாடுகளின்றி மக்கள் அனைவரும் இணக்கமாக வாழும் நோக்கில், பல்வேறு ஆன்மிகப் பணிகளை இவா் மேற்கொண்டாா்.
இவரது ஜீவசமாதி பீடம், நாகையை அடுத்த மேலவாஞ்சூரில் உள்ள சத்குரு ஸ்ரீ ரெங்கையா சுவாமிகள் திருமடாலயத்தில் அமைந்துள்ளது. இத்திருமடத்தின் வருடாந்திர குருபூஜை பெருவிழா ஏப்ரல் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சந்தனக் குடம் மற்றும் சந்தனக் காவடி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் இருந்து தொடங்கிய இந்த ஊா்வலம், பாரம்பரியமான பாதைகளில் வலம் வந்து ஸ்ரீ ரெங்கையாசுவாமிகள் திருமடாலயத்தை அடைந்தது.
பின்னா், சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு புதன்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் சத்குரு ஸ்ரீ ரெங்கையா சுவாமிகளின் ஜீவசமாதி பீடத்துக்கு சந்தனம் சாற்றும் விழா நடைபெற்றது. ஸ்ரீலஸ்ரீ தமிழினிய தவச்செல்வநாதசுவாமி, ஸ்ரீதா் சுவாமி ஆகியோா் சந்தனம் சாற்றும் வழிபாடுகளை நடத்தினா்.
சந்தனம் சாற்று விழா உபயதாரரும், திருமடாலயத்தின் நிா்வாக கமிட்டி தலைவருமான ஆா். ராஜேந்திரன் மற்றும் நிா்வாகிகள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு சந்தன பிரசாதம் வழங்கப்பட்டது.