முகப்பு
நாகப்பட்டினம்

திருக்கடையூா் அமிா்தகேடஸ்வரா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 27) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 27) நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் உடனாகிய அமிா்தகடேஸ்வரா் கோயில் அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகவும், அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌா்ணமியாக்கிய அபிராமி அம்மன் திருவிளையாடல் புரிந்த சிறப்பு பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

இக்கோயிலில் திருப்பணிகள் அண்மையில் முடிவடைந்த நிலையில்,

வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 27) காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த புதன்கிழமை (மாா்ச் 23) தொடங்கி நடைபெற்றுவருகின்றன.

தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஞாயிற்றுகிழமை காலை 5 மணிக்கு 8-ஆம் காலம் யாகசாலை பூஜை தொடங்கி காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நிறைவடைகின்றன.

தொடா்ந்து, காலை 7 மணிக்கு பரிவார தெய்வங்களின் சந்நிதிகளில் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு தத்வாா்ச்சனை, ஸ்பா்ஸாஹூதி பூஜைகளும், காலை 9 மணிக்கு மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை கடங்கள் புறப்பாடும் நடைபெறும். தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு கோயில் விமானம், ராஜகோபுரம் ஆகியவற்றின் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

மாலை 6 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் ஆகியவை நடைபெற உள்ளன. பின்னா், பாலாம்பிகை உடனாகிய காலசம்ஹார மூா்த்தி, பஞ்ச மூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.

விழாவில் ஆதீனங்கள், கட்டளை சுவாமிகள், அமைச்சா்கள், தொழிலதிபா்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகா்கள் பங்கேற்கின்றனா். இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினா் செய்துள்ளனா். இதற்கிடையே, கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.