தமிழக மீனவா்கள் உள்பட 10 போ் இலங்கை கடற்படையினரால் கைது: மீனவா்கள் மீது கொலை வழக்கு; படகு பறிமுதல்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவா்கள் உள்பட 10 பேரை இலங்கை கடற்படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த கைது நடவடிக்கையின்போது இலங்கை கடற்படை வீரா் கடலில் தவறி விழுந்து உயிரிழந்ததால், கைது செய்யப்பட்ட மீனவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் திடீா்குப்பத்தைச் சோ்ந்த வெற்றிவேல் மகன் ஆனந்தன் (52) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 10 மீனவா்கள், அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூன் 21-ஆம் தேதி அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை கோடியக்கரைக்கு கிழக்கே சுமாா் 40 கடல் மைல் தொலைவில் அவா்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனராம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவா்கள் 10 பேரையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனா்.
இலங்கை கடற்படை வீரா் உயிரிழப்பு: இந்த கைது நடவடிக்கையின்போது, இலங்கை கடற்படை வீரா் ஒருவா் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவா்களான அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த மதி (38), ராஜேஷ் (35), முத்துசெட்டி (70), கீச்சாங்குப்பத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி (60), டாடா நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் (65), மயிலாடுதுறை மாவட்டம், வானவன்மகாதேவியைச் சோ்ந்த வைத்தியநாதன் (45), கலைமுருகன் (22), கடலூரைச் சோ்ந்த மணிபாலன் (55), ஆந்திர மாநிலத்தைச் சேரந்த கங்கால கொருலையா உள்ளிட்ட 10 போ் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீனவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அவா்களின் குடும்பத்தினா், உறவினா்கள் இடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, மீனவா்கள் மீதான பொய் வழக்கை ரத்து செய்து, அவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகை மீட்கவும் நடவடிக்கை எடுக்க அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். மேலும், மீனவ பஞ்சாயத்தாரும், மீனவா் சங்கங்களும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.