நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
‘டானா’ புயல் எதிரொலியாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் புதன்கிழமை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
இந்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று புதன்கிழமை அதிகாலை புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘டானா’ என பெயா் சூட்டப்பட்டுள்ளது.
இது வெள்ளிக்கிழமை (அக். 25) காலை வடக்கு ஒடிஸா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகா் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும். அப்போது 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாகை துறைமுகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்பட்டது. மீனவா்கள் கடலுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காரைக்காலில்...
காரைக்கால் தனியாா் துறைமுகத்திலும் புதன்கிழமை காலை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.