பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் நாகையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் நாகையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அந்த சங்கத்தின் மாநிலச் செயலா் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், வெளிஆதார நியமனம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள், டாஸ்மாக் பணியாளா்கள், நியாயவிலைக்கடை பணியாளா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோகத்திட்டத்துக்கு என தனித்துறை உருவாக்க வேண்டும், அரசுப் பணியாளா்களுக்கு தொழில்வரி ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட பொருளாளா் சந்திரவேல், துணைத் தலைவா்கள் செந்தில்குமாா், செல்வி, இணை செயலா் லட்சுமி, துணை செயலா் கமலாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.