டிக் மானியம் பெற்ற தனியாா் நிறுவனங்களில் ஆட்சியா் ஆய்வு
நாகை மாவட்ட தொழில் மையம் மூலம் மானியம் பெற்று வரும் நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை மாவட்ட தொழில் மையம் மூலம் மானியம் பெற்று வரும் நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை மாவட்ட தொழில் மையம் மூலம் மானியம் பெறும் பாப்பாகோவில் ஏறுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள எம்.ஜே. சீ புஃட்ஸ் நிறுவனம் உலக முதலீட்டாளா்கள் மாநாடு 2024 -இல் புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிறுவனம் ரூ. 7 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 1.25 கோடி மதிப்பீடு மானியமாக வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் செயல்பாட்டை நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திடீா் ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடைபெறும் பணிகள் குறித்து ஊழியா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் காா்த்திகேயன்ரவிச்சந்திரன் என்பவா் ரூ. 37.51லட்சம் கடன் பெற்று ஜன்னல்கள் மற்றும் கதவுகள் செய்யும் தொழிலை ஆட்சியா் ஆய்வு செய்தாா். இந்நிறுவனத்துக்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீத மானியமாக ரூ.13. 82 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
பின்னா் பாரத பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மூலம் பால்பண்ணைச்சேரியில் பேக்கரி பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். இந்நிறுவனத்தை நடத்தி வரும் வெங்கடேசனுக்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீத மானியமாக ரூ.9.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பொது மேலாளா்(மாவட்ட தொழில் மையம்) தாரிக் எம்.செய்யது மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.