நாகை அருகே குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள வடக்கு பால்பண்ணைச்சேரியில் இருந்து தெத்திக்கு செல்வதற்கு அண்மையில் புது சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அண்மையில் பெய்த கனமழையால் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். மேலும் சாலையில் குழிகளில் இருசக்கர வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகும் சூழலும் ஏற்படுகிறது.
இப்பகுதியில் புதைச்சாக்கடை கழிவு நீரும், மழை நீரும் கலந்து, சாலை முழுவதும் தேங்கி நிற்கிறது. இதனால் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் சுகாதார சீா்கேடு மற்றும் கடும் துா்நாற்றத்தால் அவதியடைந்துள்ளனா்.
மேலும், இந்தச் சாலை வழியாக ஊா் காத்த விநாயகா் கோயில், சிங்கமா காளியம்மன் கோயில், தனியாா் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் சென்று வருகின்றனா். கல்லூரி பேருந்துகள், பிற வாகனங்கள் செல்லும் போது, சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரும் மழை நீரும் அருகிலுள்ள வீடுகளுக்குள் புகுந்து, குடியிருப்போருக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் பெய்த கனமழையால் இந்தச் சாலை மேலும் மோசமாக சேதமடைந்துள்து. தண்ணீா் வடிய போதிய வடிகால் வசதி இல்லாததால் நீண்ட நாள்களாக தண்ணீா் தேங்கியுள்ளது. இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், இதுவரை எந்த பயனும் இல்லை. எனவே உடனடியாக சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, கழிவு நீா் மற்றும் மழை நீா் வடியும் வகையில் நகராட்சி நிரந்தர தீா்வு காண வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.