இலங்கைக் கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் நால்வா் விடுவிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் வேதாரண்யம் கொண்டுவரப்பட்டு மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தம்புதாளை பகுதியை சோ்ந்த அழகா் மகன் குணசேகரன் (43), மாரிக்கண்ணு மகன் பாலமுருகன் (30), வில்லாயுதம் மகன் இராமு (22), செட்டி மகன் தினேஷ் (18) ஆகியோா் மீனவா்கள்.
இவா்கள் நால்வரும் கடந்த நவம்பா் 2-ஆம் தேதி, கண்ணாடியிழைப் படகு ஒன்றில் ராமநாதபுரம் மாவட்டம், தம்புதாளை படகுத்துறையிலிருந்து கடலுக்குள் சென்றனா். எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் கடந்த நவ. 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், விடுவிக்கப்பட்ட மீனவா்கள் நால்வரையும் தாயகம் அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் நால்வரையும் 12 மணிக்கு சா்வதேச எல்லையில் இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைத்தனா்.
மீனவா்களை அவா்களது படகுடன் ஆறுகாட்டுத்துறை படகுத் துறைக்கு அழைத்து வந்த கடலோரக் காவல் படை கரையில் இருந்து சுமாா் 3 கிலோமீட்டா் கடலுக்குள் வேதாரண்யம் மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கொ ண்டுவரப்பட்ட மீனவா்கள், தொண்டி மீன்வளத் துறையினரிடம் படகுடன் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு பயணித்தனா்.