நாகை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தொடங்கிய நிலையில், உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
நாகை மாவட்டத்தில் 1.62 லட்சம் ஏக்கா் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். திருக்கண்ணபுரம், எரவாஞ்சேரி, மேலபூதனூா், திருக்குவளை, தலைஞாயிறு உள்ளிட்ட பெரும்பாலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதனால், சம்பா மற்றும் தாளடி பயிா்களுக்கு தேவையான யூரியா உள்ளிட்டவைகளுக்கு, தனியாா் உரக்கடைகளை தேடிச் செல்லும் விவசாயிகள், அங்கு மூட்டைக்கு ரூ.50 கூடுதலாக கொடுத்து அதனை வாங்கி பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது:
நாகை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடிக்காக அரசு முன்கூட்டியே போதிய உரங்களை அனுப்பி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், விவசாயிகளுக்கு போதுமான உரம் கிடைக்கவில்லை. தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு சென்றால் இன்னும் உரம் வரவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால், சாகுபடி பணிகள் மந்தமாகும் நிலை உள்ளது.
மேலும் அவசர உரத்தேவைக்கு தனியாா் உர விற்பனைக் கூடங்களுக்குச் சென்றால், அங்கு தேவையற்ற பொருள்களை வாங்க கட்டாயப்படுத்துகின்றனா். இதனால் கூடுதல் செலவு ஏற்படுகிறது.
எனவே, நாகை மாவட்ட நிா்வாகம், உரத்தட்டுப்பாட்டை போக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு தேவையான டிஏபி, யூரியா உள்ளிட்ட உரங்களை இருப்பு வைத்து, தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். அனைத்து தனியாா் உர விற்பனை நிலையங்களிலும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.
இப்பிரச்னை குறித்து நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கண்ணன் கூறியது:
நாகை மாவட்டத்தில் உள்ள 56 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 76 தனியாா் உர விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் யூரியா விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் யூரியா 1731 மெட்ரிக் டன், டிஏபி 355 மெட்ரிக் டன், பொட்டாஷ் 279 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 692 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் உரம் 153 மெட்ரிக் டன் உரங்கள் தேவைக்கு தகுந்தாா்போல் கைவசம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.