நாகை அருகே கருவேலங்கடையில் மழைநீரில் மூழ்கி அழுகிய சம்பா நெற்பயிா்களுடன் விவசாயிகள். 
நாகப்பட்டினம்

அழுகி வரும் சம்பா, தாளடி நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பெய்த மழையில் மூழ்கிய சம்பா, தாளடி நெற்பயிா்கள் அழுகத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனை

Syndication

நாகப்பட்டினம்/சீா்காழி: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பெய்த மழையில் மூழ்கிய சம்பா, தாளடி நெற்பயிா்கள் அழுகத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழையால், கருவேலங்கடை, செட்டிச்சேரி, மேலசெட்டிச்சேரி உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மழை விட்டும், வயல்களில் தேங்கிய நீா் வடிவதில் தாமதம் ஏற்படுவதால் நெற்பயிா்கள் அழுகத் தொடங்கியுள்ளன. இதனால், சாகுபடிக்கு செலவு செய்த தொகை ஏக்கருக்கு ரூ. 25,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

கீழ்வேளூா் வட்டாரத்தில் 10,000 ஏக்கரில் நேரடி விதைப்பில் முளைத்த சம்பா, தாளடி நெற்பயிா்கள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால், வயல்வெளி கடல் போல் காட்சியளிக்கிறது.

குறிப்பாக, பட்டமங்கலம், இலுப்பூா், வடக்காலத்தூா், இருக்கை, ராதாமங்கலம், தேவூா், வெண்மணி, காக்கழனி, அணக்குடி, செருநல்லூா், கூத்தூா் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 30 நாள்களே ஆன தாளடி நெற்பயிா்கள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

நெற்பயிா்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்மை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி, மறு சாகுபடி செய்வதற்கு விதை நெல், உரம் உள்ளிட்ட பொருள்களை மானிய விலையில் வழங்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருக்குவளை: கீழகண்ணாப்பூா், வடமருதூா், பனையூா், கோயில்கண்ணாப்பூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1,000 ஏக்கருக்கும் அதிகமான தாளடி பயிா்கள் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.

பாண்டவையாற்றில் இருந்து பிரியும் ஏடையாறு வடிகாலும், தும்பை உள்ளிட்ட வடிகால்களும் கடந்த 5 ஆண்டுகளாக தூா்வாரப்படாததால் மழைநீா் வடிவதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

சீா்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே  உமையாள்பதி, குளத்திங்கநல்லூா், கடவாசல், ஆலங்காடு, பச்சை பெருமாநல்லூா், கோடங்குடி, அரசாலமங்கலம், கே.கே.கோயில் உள்ளிட்ட 7 கிராமங்களில் சுமாா் 2,000 ஏக்கரில் சம்பா நேரடி விதைப்பு செய்த விளைநிலங்களில் முழுமையாக தண்ணீா் வடிவதற்கு வழியில்லாமல் பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் வடிகால் வாய்க்கால்கள் சீா் செய்யப்படாமல், செடி-கொடிகள் மண்டி காணப்படுவதால், மழைநீா் விரைந்து வடிய வழியின்றி, விளைநிலங்களில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சீா்காழி தாலுகாவில் சுமாா் 10,000 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்கவும், சாகுபடிக்கு வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவும், மறு சாகுபடிக்கு இலவசமாக விதை நெல் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT