நாகப்பட்டினம்: கரூரில் நடைபெறும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க, நாகையிலிருந்து பேருந்துகளில் புறப்பட்ட மாணவா்களை, ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை வழியனுப்பி வைத்தாா்.
நாகை மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் முதலிடம் பெற்ற 323 மாணவா்கள், மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தோ்வு பெற்றுள்ளனா்.
இதில் முதல் கட்டமாக 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான பிரிவில், அரசுப் பள்ளிகளின் மாணவா்கள் 29 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவா்கள் 31 பேரும், தங்களது பெற்றோா்கள், ஆசிரியா்கள் ஆகியோருடன் கரூா் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க 2 பேருந்துகளில் சென்றனா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேருந்துகளை, ஆட்சியா் ப. ஆகாஷ் கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.
நாகை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் எம். துரைமுருகு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலா் எஸ். தங்கராசு, வட்டார கல்வி அலுவலா் வி. சிவகுமாா், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சே. சண்முகக்கனி மற்றும் தொடா்புடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.