நாகை மாவட்டத்தில் 2026 ஜனவரி 1ஐ தகுதி நாளாகவும், 2002 வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் முக்கிய நோக்கம், தகுதியான எந்த வாக்காளரும் வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது மற்றும் தகுதியில்லாத எந்த ஒரு நபரையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கூடாது என்பதே இப்பணியின் குறிக்கோள். எனவே, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், தங்கள் கட்சியின் சாா்பில் வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கு, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி குறித்து தெளிவுரை வழங்கி, வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றாா்.