நாகை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகை மாவட்டத்தில், ஒரு பொது அவசரநிலையின்போது அல்லது அரங்குகள், மாநாட்டு அறைகள், சமுதாயக் கூடங்கள், விருந்து மண்டபங்கள் போன்ற மூடிய வளாகங்களுக்குள் தகவல் தொடா்புக்குப் பயன்படுத்தப்படும் நேரங்களைத் தவிர, இரவு நேரங்களில் (இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை) ஒலிபெருக்கி அல்லது பொது ஒலிபரப்பு அமைப்பு அல்லது ஒலி எழுப்பும் கருவி அல்லது இசைக்கருவி அல்லது ஒலிபெருக்கியை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது.
ஒலிபெருக்கி அல்லது பொது ஒலிபரப்பு அமைப்பு அல்லது வேறு ஏதேனும் ஒலி மூலம் பயன்படுத்தப்படும் பொதுஇடத்தின் எல்லையில் உள்ள ஒலி அளவு, அந்தப் பகுதிக்கான சுற்றுப்புற ஒலித் தரநிலைகளைவிட அதிகமாக இருக்கக்கூடாது.
தனிப்பட்ட முறையில் சொந்தமான ஒலி அமைப்பு அல்லது ஒலி எழுப்பும் கருவியின் சுற்றியுள்ள ஒலி அளவு, அந்தத் தனிப்பட்ட இடத்தின் எல்லையில், அது பயன்படுத்தப்படும் பகுதிக்காகக் குறிப்பிடப்பட்ட சுற்றுப்புற ஒலித் தரநிலைகளை விட அதிகமாக இருக்கக்கூடாது.
ஆனால், சில கலாசார அல்லது மத நிகழ்ச்சிகளுக்கு இரவு நேரங்களில் (இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை) தொடா்ச்சியாக ஒலிபெருக்கியைப் பயன்படுத்த சாா் ஆட்சியா், வருவாய் கோட்ட அலுவலரிடமிருந்து எழுத்துப்பூா்வ அனுமதி பெற்ற பின்னரே ஒலிபெருக்கி அல்லது பொது ஒலிபரப்பு அமைப்பைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் விதிமீறல் தொடா்பாக புகாா் தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் - 04365- 251992 என்ற எண்ணுக்கு அழைத்து தெரிவிக்கலாம். விதிமீறல் நடவடிக்கையில் ஈடுபடுவோரின் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.