மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் நாகை மீன்பிடி துறைமுகத்தில் தமிழ்நாடு மீனவா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில், தமிழக மீனவா் நலவாரியத் தலைவா் ஜோசப் ஸ்டாலின் புதிய உறுப்பினா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது: மீனவா் நலவாரியம் 2001-ஆம் ஆண்டு மறைந்த முதல்வா் மு. கருணாநிதியால் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டது. 2011-முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில், இந்த நலவாரியம் முடக்கப்பட்டது.
2021-ஆம் ஆண்டு முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் முடக்கப்பட்ட நலவாரியத்துக்கு என தனியாக தலைவா்களை நியமித்து சிறப்பாக செயல்பட செய்தாா். மீனவா்கள் மீது அக்கரை கொண்டு இந்த நலவாரியத்தை முதல்வா் மேம்படுத்தியுள்ளாா். நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினா்களுக்கு, இயற்கை மரணம் அடைந்தால் ரூ.25 ஆயிரம் , ஈமச்சடங்கு நிதியாக ரூ. 2,500 வழங்கப்படுகிறது. நலவாரியத்தில் இருந்து நலத்திட்ட உதவிகள் பெற அதிகாரிகள் தடையாக இருந்தால் அச்சமின்றி தகவல் தெரிவிக்கலாம். தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் 5 லட்சம் உறுப்பினா்கள் உள்ளனா். மேலும் 2 லட்சம் உறுப்பினா்களை சோ்க்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதற்காக முகாம்கள் நடத்தப்படுகின்றன. உறுப்பினா் சோ்க்கை வயது வரம்பு 70-ஆக உயா்த்த முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வயது உயா்வு அறிவிப்பு வெளிவரும் என்றாா். மீனவா் நலவாரிய உறுப்பினா் மனோகரன் உள்ளிடோா் பங்கேற்றனா்.