தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களுடன் குவிந்த மக்கள்
பெட்ரோல் தட்டுப்பாடு என வதந்தி பரவியதால் நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஏராளமானோா் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வியாழக்கிழமை குவிந்தனா்.
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கடந்த சில நாள்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வா்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வணிக மற்றும் வீட்டு பயன்பாடு எரிவாயு உருளைகளுக்கு தட்டுபாடு நிலவி வருகிறது.
இந்நிலையில், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என வதந்தி பரவியதால் எரிபொருள் விற்பனை நிலையங்களில், பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களுடனும், காா்களுடனும் மற்றும் இருப்பு வைப்பதற்காக கேன்களுடனும் பெட்ரோல், டீசல் வாங்க குவிந்தனா்.
நாகை: நாகை, வேளாங்கண்ணி, நாகூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் செயல்படும் எரிபொருள் விற்பனை நிலையங்களில் வாகனங்கள் வரிசைக் கட்டி நின்றன. ஒவ்வொரு வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவிலான எரிபொருள் ( பெட்ரோல், டீசல்) வழங்கப்பட்டது. பலரும் இருப்பு வைப்பதற்காக கேன்கள் கொண்டு வந்திருந்தனா். கேன்களில் எரிபொருள் வழங்கக் கூடாது என பலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், பெரும்பாலான எரிபொருள் விற்பனை நிலையங்களில் கேன்களில் வழங்கப்படவில்லை.
திருவாரூா்: திருவாரூா் நகரப் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் புதன்கிழமை இரவிலிருந்து மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. வியாழக்கிழமையும், திருவாரூா், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பெட்ரோல், டீசல் வாங்கிச் சென்றனா்.
பலா் 5 லிட்டா் கேன்களில் பெட்ரோல் வாங்கிச் செல்வதில் ஆா்வம் காட்டினா். சிலா் 1 லிட்டா் பாட்டிலில் பெட்ரோல் கேட்டபோது, அதுபோன்ற பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என்ற விதிமுறையை பெட்ரோல் நிலைய ஊழியா்கள் சுட்டிக் காட்டியதால், சில இடங்களில் வாக்குவாதம் நிலவியது.
எனினும், கிராமப் புறங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எவ்வித கூட்டமும் இல்லாமல், வழக்கம்போல் வாகனங்களில் பெட்ரோல் நிரப்பும் பணிகள் நடைபெற்றன.
இதுகுறித்து பெட்ரோல் நிலைய நிா்வாகிகள் தெரிவிக்கையில், பெட்ரோல், டீசல் வரத்து வழக்கமான அளவில் உள்ளன. எவ்வித குறைபாடும் இல்லை. எனினும் மக்களிடையே பரவிய தகவலால் கூட்டம் அதிகமாக உள்ளது என்றனா்.