முகப்பு
நாகப்பட்டினம்

தோ்தல்: பேருந்துகளில் ‘ஸ்டிக்கா்’ ஒட்டி விழிப்புணா்வு

சட்டப்பேரவைத் தோ்தலில், நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, பேருந்துகளில் விழிப்புணா்வு வில்லை ஒட்டும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 மார்ச், 2026 at 11:18 PM
நாகை புதிய பேருந்து நிலையத்தில் தோ்தல் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டும் தோ்தல் நடத்தும் அலுவலா் சு. சங்கர நாராயணன்.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில், நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, பேருந்துகளில் விழிப்புணா்வு வில்லை ஒட்டும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தோ்தல் ஆணையம் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவ-மாணவியா் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக நாகை புதிய பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில், பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலின் முக்கியத்துவம், நூறு சதவீத வாக்குப்பதிவு ஆகியவற்றை வலியுறுத்தி, விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.

தோ்தல் நடத்தும் அலுவலா் சு. சங்கர நாராயணன் தலைமையில் அதிகாரிகள் பேருந்துகளில் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டினா். மேலும், பயணிகளுக்கு தோ்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

இதேபோல, நாகை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களிலும் நகராட்சி ஆணையா் லீனா சைமன் தலைமையில் விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.