திருவாரூர்

வாடகைக்கு குடியிருக்க வந்தவர் கொடுத்த மருந்தை குடித்த பெண் சாவு: நகை பறிப்பு 

DIN

திருவாரூர் அருகே வாடகைக்கு குடியிருக்க வீடு கேட்டு வந்தவர் கொடுத்த மருந்தைக் குடித்த பெண் உயிரிழந்தார். அவர் அணிந்திருந்த நகையை காணவில்லை என்பதால், வாடகைக்கு வீடு கேட்டு வந்தவர் நகையை பறித்துச் சென்றாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் அருகே உள்ள புலிவலம், விஷ்ணுத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பிள்ளை (75). இவரது மனைவி சகுந்தலா(65). இவர்களுக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கக் கேட்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒருவர் வந்துள்ளார். அவர், தன்னை நாட்டு வைத்தியர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, இன்னும் சில தினங்களில் முன்பணம் கொடுத்துவிட்டு வாடகைக்கு குடிவருவதாக கூறிவிட்டுச் சென்றாராம்.
பின்னர், திங்கள்கிழமை இரவு (நவ.12) மீண்டும் வந்த அந்த நபர், முன்பணத்தொகையை கொடுக்க செல்லப்பிள்ளை வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது உடல் நலக்குறைவு காரணமாக செல்லப்பிள்ளையும், அவரது மனைவி சகுந்தலாவும் படுத்திருந்தனர். இதைக்கண்ட நாட்டு வைத்தியர், தன்னிடம் உள்ள மருந்தை கொடுத்து, அதை கஷாயம் வைத்து அருந்தினால் உடல் குணமாகிவிடும் எனக் கூறினாராம்.
அந்த மருந்தை கஷாயம் வைத்துக் குடித்த தம்பதியர் இருவரும் மயக்கமடைந்ததாகத் தெரிகிறது. அப்போது, சகுந்தலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை நாட்டு வைத்தியர் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. 
 அருகில் வசிப்பவர்கள் இதையறிந்து, மயங்கிக்கிடந்த தம்பதியை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சகுந்தலா இறந்தார். செல்லப்பிள்ளை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதுகுறித்து, திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, நாட்டு வைத்தியர் என வந்தவர் யார், அவர் கொடுத்த கஷாயத்தில் விஷம் கலந்திருந்ததா, அவர்தான் நகையை எடுத்துச் சென்றாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT