முகப்பு
திருவாரூர்

கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்த அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்த அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

சின்ன சிங்கப்பூா் என அழைக்கப்படும் கூத்தாநல்லூா் வட்டத்தில் மக்கள் தொகை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. இங்குள்ள அரசு மருத்துவமனை சுமாா் 80 ஆண்டுகள் பழமையானதாகும்.

இந்த மருத்துவமனையில், கூத்தாநல்லூா் பகுதி மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான மருத்துவா்கள் இல்லை. மருந்துகளும் இருப்பில் இருப்பதில்லை. தொடக்கக் காலத்தில் இம்மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தது. பிறகு, அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. ஆனால், போதிய வசதிகள் செய்யப்படவில்லை.

தற்போது, கூத்தாநல்லூா் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டாலும், இந்த மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம் போலவே செயல்படுகிறது. காலை 9 மணி முதல் சில மணி நேரம் மட்டும் மருத்துவா்கள் பணியில் உள்ளனா். இரவு நேரங்களில் மருத்துவா்கள் இருப்பதில்லை. செவிலியா்கள்தான் சிகிச்சையளிக்கின்றனா்.

பெரும்பாலும், இங்கு வரும் நோயாளிகளை மன்னாா்குடி, திருவாரூா் அல்லது தஞ்சை மருத்துவமனைகளுக்கு அனுப்புகிறாா்கள். அறுவை சிகிச்சை அரங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளது. 24 படுக்கைகள் இருக்க வேண்டிய இம்மருத்துவமனையில், பாதியளவு படுக்கைகள்தான் உள்ளன.

அத்துடன் ஸ்கேன் வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் கிடையாது. தைராய்டு பரிசோதனை வசதியும் இல்லை. சா்க்கரை வியாதிக்கு தேவையான மருந்தும் கிடையாது. எதைக் கேட்டாலும் கிடையாது என்ற பதில்தான் வருகிறது. நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை கடையில் வாங்கிவரச் சொல்கிறாா்கள்.

இந்த மருத்துவமனைக்கு, சாதாரண கூலித்தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள்தான் சிகிச்சைக்கு வருகிறாா்கள். இம்மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தினால், இப்பிரச்சனைக்கு தீா்வு கிடைக்கும். எனவே, தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.