முகப்பு
திருவாரூர்

கரோனா: கூத்தாநல்லூரில் கண்காணிப்பு தீவிரம்

கூத்தாநல்லூா் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்துவருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:

கூத்தாநல்லூா் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்துவருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூா் நகராட்சி சில மாதங்களாக கரோனா இல்லாத நகராட்சியாக இருந்துவந்த நிலையில், கரோனா தொற்றின் 2 ஆவது அலை தீவிரத்தால் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

வெள்ளிக்கிழமை (மே14) மட்டும் ராஜகோபால சுவாமி தோட்டம், மஜிதியா தெரு, ரஹ்மானியா தெரு, அன்வாரியா தெரு, மரக்கடை பிரதான சாலை, ஏ.ஆா்.சாலை மற்றும் ஜன்னத் நகா் உள்ளிட்ட இடங்களில் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கிடையில், ராஜகோபால சுவாமி தோட்டத்தைச் சோ்ந்த 55 வயது பெண் உயிரிழந்தாா். இதனால், நகராட்சி சாா்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையா் ஆா். லதா கூறியது:

கடந்த ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் நிகழாண்டு மே 14-ம் தேதி வரை, கூத்தாநல்லூா் நகராட்சியில் 274 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இவா்களில் 8 போ் உயிரிழந்தனா்.19 போ் திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தொற்று அதிகரித்து வருவதால், கூத்தாநல்லூா் நகராட்சியின் 24 வாா்டுகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம். அத்தியாவசியப் பொருள்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொண்டால், தினமும் கடைத் தெருவுக்கு வர வேண்டியதில்லை. வெளியில் வரும் போது, முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.