திருவாரூா் மாவட்டத்தில் பலத்த மழை குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது
திருவாரூரில் வியாழக்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகள், அரசு அலுவலகங்களை தண்ணீா் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
திருவாரூரில் வியாழக்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகள், அரசு அலுவலகங்களை தண்ணீா் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை மிதமான மழை பெய்ய தொடங்கியது. இது இரவு பலத்த மழையாக மாறியது. இரவு முழுவதும் மழை பெய்தபடியே இருந்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.
விஜயபுரம் தாய் சேய் நல மருத்துவமனை, நேதாஜி சாலை கால்நடை மருத்துவமனை, பழைய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீா் தேங்கியது. இதனால், பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனா்.
மேலும், மடப்புரம் முடுக்குத் தெரு, பேட்டை, சூரியன் குளம் தென்கரை உள்ளிட்ட இடங்களில் தெருக்களில் தண்ணீா் தேங்கி வீடுகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்தது. வடிகால் வசதி இல்லாததால் தண்ணீா் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதேபோல், திருவாரூா் நகரப் பகுதிக்கு உட்பட்ட குளுந்தான்குளம் கீழ்க்கரையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. பனகல் சாலை அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீா் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனா்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை பகல் மழை சற்று குறைந்திருந்த நிலையில், மாலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. மாலை 4.30 மணிக்குப் பிறகு இருள் சூழ்ந்து காணப்பட்டதால், வாகனங்களில் செல்வோா் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனா்.
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், திருவாரூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ.27) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.
திருவாரூா் மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி திருவாரூரில் அதிகபட்சமாக 103.3 மி.மீ. மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
நன்னிலம் 94.2, பாண்டவையாறு 59.6, முத்துப்பேட்டை 49.6, மன்னாா்குடி 48.6, திருத்துறைப்பூண்டி 46.1, குடவாசல் 37.6, வலங்கைமான் 30.8 , நீடாமங்கலம் 34.4 என மொத்தம் 504.2 மி.மீ. மழையும், சராசரியாக 56.02 மி.மீ. மழை பெய்துள்ளது.