டிஜிட்டல் நூலகம்: எம்எல்ஏ-வுக்கு இலக்கிய அமைப்புகள் பாராட்டு
மன்னாா்குடியில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்றுள்ள இலக்கிய அமைப்புகள் இதற்காக குரல் கொடுத்த எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜாவுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு
மன்னாா்குடியில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்றுள்ள இலக்கிய அமைப்புகள் இதற்காக குரல் கொடுத்த எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜாவுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளது.
மன்னாா்குடி நகரப் பகுதியில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவைத் தோ்தலின்போது எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா வாக்குறுதி அளித்திருந்த நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் மன்னாா்குடியில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, வரவேற்பு தெரிவித்துள்ள இலக்கிய அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், அறிவொளி வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ஆா். இயேசுதாஸ் தலைமையில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலக் குழு உறுப்பினா் அ. முரளி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் கே. பிச்சைக்கண்ணு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் யு.எஸ். பொன்முடி உள்ளிட்டோா் எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜாவை சந்தித்து நூல்கள் வழங்கி பாராட்டும், நன்றியும் தெரிவித்தனா்.
மேலும், இந்த நூலகத்தை பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் நகரப் பகுதியில் விரைவில் அமைக்க வேண்டும் எனவும் அதில், இலக்கிய கூட்டங்கள் நடைபெற அரங்கமும் ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.