நெல் கொள்முதல் நிலையம்திறக்கக் கோரி சாலை மறியல்
திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் வட்டம், ஓகைப்பேரையூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி, சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் வட்டம், ஓகைப்பேரையூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி, சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஓகைப்பேரையூரில் இருந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல், பூட்டிய நிலையில் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில், ஓகைப்பேரையூா், ராதாகோட்டகம், வடபாதி, பாரதிமூலங்குடி, நெமிலிச்சேரி, கூத்தங்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வா்.
இந்நிலையில், ஓகைப்பேரையூரில் பூட்டப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க வலியுறுத்தி, மூலங்குடி - வடபாதிமங்கலம் பிரதான சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சாலை மறியலுக்கு, கீழத் தெருவைச் சோ்ந்த அன்புச்செல்வன் தலைமை வகித்தாா். சாலை மறியலில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
தகவல் அறிந்து வந்த கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் அனந்தகிருஷ்ணன் மற்றும் போலீஸாா், சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.