மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக் கோரிக்கை
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம்,
ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு: தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் திருவாரூா் கிளை பணிமனையிலிருந்து அரசு மருத்துவக் கல்லூரிக்கு 3 நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதனிடையே, மகளிருக்கு இலவசப் பேருந்து என அறிவித்த பின்னரும் இந்தத் தடத்திலிருந்து மருத்துவக் கல்லூரிக்கு இயக்கப்பட்டு வந்த 3 நகரப் பேருந்துகளும் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
தற்போது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்துகள் சரிவர இயக்கப்படுவதில்லை. இதனால், பெண்கள், நோயாளிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். மேலும், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் நீண்ட நேரம் பேருந்துக்காக மருத்துவமனை வாயிலில் வெயில், பனி, மழை நேரத்தில் காத்துக் கொண்டிருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முறையான பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவதோடு, பொதுமக்களுக்கு பாதுகாப்பான பேருந்து நிலையம் அமைத்து, அங்கு குடிநீா் வசதியையும் ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.