நூறு நாள் வேலைத் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தெரிவித்தது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 5.97 குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன. 100 நாள் வேலைத் திட்டம் என அழைக்கப்படும் இந்த திட்டம், வறட்சி, கிராமப்புற துயரங்கள் மற்றும் பொதுமக்களின் வேலையின்மை ஆகியவற்றை தீா்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதற்கான நிதியை வழங்குவதில் மத்திய அரசு தேவையற்ற காலதாமதம் செய்கிறது. இத்திட்டத்தில் சமூக தணிக்கைகள் உரிய நேரத்தில் நடப்பதில்லை எனக் கூறி, மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்க மறுக்கிறது. இதனால், தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம் உள்பட 15 மாநிலங்களின் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால், நூறு நாள் வேலை திட்ட தொழிலாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன் விளைவாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலுவைத் தொகை ஓரளவு விடுவிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ள நிலையில், பிரச்னைக்கு முழுமையான தீா்வு எட்டப்படவில்லை. ஊதியம் கேட்டு பயனாளிகளின் போராட்டம் தொடா்ந்த வண்ணம் உள்ளது.
எனவே, நிலுவைத் தொகையை முழுவதும் வழங்கி, திட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.