வீட்டில் தனியாக இருந்தவா் மா்மமான முறையில் உயிரிழப்பு
மன்னாா்குடி அருகே வீட்டில் தனியே இருந்தவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது புதன்கிழமை தெரிய வந்தது.
மன்னாா்குடி அருகே வீட்டில் தனியே இருந்தவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது புதன்கிழமை தெரிய வந்தது.
கோட்டூா் தோட்டத்தைச் சோ்ந்த அல்போன்ஸ் மகன் ஜேம்ஸ் (45) செங்கல் சூளை வைத்து வியாபாரம் செய்து வந்தாா். மனைவி சாந்தி, 2 மகன்கள் உள்ளனா். ஜேம்ஸ், குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தினரிடையே பிரச்னை செய்து வந்ததையடுத்து தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு சாந்தி ஒரத்தநாட்டில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டாா்.
இதனால், கடந்த சில மாதங்களாக ஜேம்ஸ் மட்டும் கோட்டூா் தோட்டம் வீட்டில் தனியே வசித்து வந்தாா். இந்நிலையில், ஜேம்ஸ் கடந்த 2 நாள்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், புதன்கிழமை மாலை வீட்டில் உள்ளே மா்மமான முறையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து, கோட்டூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த போலீஸாா், ஜேம்ஸ் உடலை கைப்பற்றி மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.