மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு முழு நிவாரணம் வழங்கக் கோரி, வரும் 30-ஆம் தேதி மன்னாா்குடியில் வேளாண்மைத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னாா்குடி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், கிளை செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
டித்வா புயல் காரணமாக தொடா் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டிச. 30-ஆம் தேதி மன்னாா்குடியில் வேளாண்மைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
மன்னாா்குடி நகரில் ரூ,. 18 கோடியில் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வா், மறுஆய்வு செய்து மகளிா் வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும், மன்னாா்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவா்,செவிலியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மன்னாா்குடி நகரில் விதிகளை மீறியும், நீதிமன்ற வழிகாட்டல்களை மீறி இயங்கி வரும் மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு சிபிஐ ஒன்றிய நிா்வாகக்குழு உறுப்பினா் எம். இலரா தலைமை வகித்தாா்.
ஒன்றியச் செயலா் துரை.அருள்ராஜன் முன்னிலை வகித்தாா்.
கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.கேசவராஜ்,மாவட்டப் பொருளாளா் கே.தவபாண்டியன்,விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கே.ஆா்.ஜோசப் ஆகியோா் பேசினா்.