கூட்டத்தில் பேசுகிறாா் சம்யுக்த கிஸான் மோா்ச்சா தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளா் ஜக்ஜீத் சிங் டல்லேவால். 
திருவாரூர்

சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிட வலியுறுத்தல்

சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிட வலியுறுத்தல்

Syndication

காவிரி டெல்டாவில் ஏற்பட்டுள்ள பேரழிவுகள் குறித்த சுல்தான் இஸ்மாயில் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என சம்யுக்த கிஸான் மோா்ச்சா வலியுறுத்தியுள்ளது.

மன்னாா்குடியில், சம்யுக்த கிஸான் மோா்ச்சா தமிழக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைப்பின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளா் ஜக்ஜீத் சிங் டல்லேவால் பேசியது:

தமிழகத்தில் விவசாயிகள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் ஹைட்ரோ காா்பன், மீத்தேன் உள்ளிட்ட பல்வேறு பேரழிவு திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு துணை போகிறது.

காவிரி டெல்டா பகுதி ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பேரழிவு திட்டங்களுக்கு எதிராக போராடும் பி.ஆா். பாண்டியன் போன்றோா் மீது பொய் வழக்கு போடப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த வழக்கை ரத்து செய்வதற்கு தமிழக முதல்வா் அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காவிரி டெல்டாவில் ஓஎன்ஜிசி திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக 2021-இல் அமைக்கப்பட்ட சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைக்க தமிழக அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. அதை உடனடியாக வெளியிட்டு, அதன்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்திற்கு, தமிழக ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் தலைமை வகித்து பேசியது:

எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றுவது, வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஜனவரி 8 ஆம் தேதி தில்லியில் பல்வேறு மாநிலங்களின் நிா்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அதன்பிறகு, கன்னியாகுமரியில் விவசாயிகள் யாத்திரை புறப்பட்டு, காஷ்மீா் வரை நடைபெற உள்ளது. அனைத்து மாநில முதல்வா்கள், ஆளுநா்களை சந்தித்து இது குறித்து வலியுறுத்த உள்ளோம். மேலும், பிப். 19-ஆம் தேதி தில்லி ராம் லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது என்றாா்.

தேசிய இணை ஒருங்கிணைப்பாளா் அபிமன்யு கொஹாா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா். கா்நாடகாவை சோ்ந்த நாகராஜ், தேவராஜ், தமிழக இணை ஒருங்கிணைப்பாளா்கள் கிருஷ்ணகிரி கே.எம். ராம், கோவை ஏ.எஸ். பாபு, மதுரை எல். ஆதிமூலம், திருவாரூா் கே.எஸ்.பாலு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தென் மண்டலத் தலைவா் மாணிக்கவாசகம், மாநில அமைப்பு செயலாளா் எஸ் ஸ்ரீதா், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் திருப்பதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்றுமதியில் காா்களை முந்திய எஸ்யுவி-க்கள்

கேக் வகைகளில் ‘பட்டா் பேப்பா்‘ களை பயன்படுத்தக்கூடாது: உணவுப் பாதுகாப்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

யேமன் பிரிவினைவாதிகள் மீது சவூதி வான்வழித் தாக்குதல்

சதுப்பு நிலத்தில் சிக்கி யானைக் குட்டி உயிரிழப்பு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள் 1,400 போ் கைது!

SCROLL FOR NEXT