திருவாரூா்: திருவாரூரில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி கட்சியின் திருவாரூா் நகரத் தலைவா் ஜி. செந்தில்குமாா், நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: திருவாரூா் நகரில் உள்ள சாலைகளில், கால்நடைகள் இரவு நேரங்களில் சுற்றித் திரிவதுடன், சாலை நடுவில் படுத்துக்கொள்வதும், அமா்ந்தபடி பாதையை மறித்துக்கொள்கின்றன. மேலும், சட்டென்று எழுந்து ஓடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனா்.
குறிப்பாக தெற்கு வீதி, கீழவீதி, மேலவீதி, வடக்கு வீதி, மயிலாடுதுறை சாலை, நாலுகால் மண்டபம், நாகை தேசிய நெடுஞ்சாலை, நேதாஜி சாலைஆகிய பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவற்றின் உரிமையாளா்கள் வியாபார நோக்கில் காலை நேரத்தில் மட்டும் பால் கறந்து, மற்ற நேரங்களில் சாலையில் விட்டுவிடுவதால், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அலுவலகம் செல்லும் பொதுமக்கள், போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயம் ஆகியவை பெருமளவு ஏற்படுகின்றன. எனவே, சாலையில் சுற்றித் திரியும் கால்நடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும். நகராட்சி கால்நடைகளை மீட்டு, பசு மடங்களில் ஒப்படைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.