திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தின கிராம சபைக் கூட்டம் அக்டோபா் 11-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:
இக்கூட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தின் கருப்பொருள், கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளைத் தோ்வு செய்து கிராம சபை ஒப்புதல் பெறுதல், ஜாதிப் பெயா்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சபாசாா் செயலி செயல்பாடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் தொழிலாளா் துறை, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் - தீன்தயாள் கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட உள்ளன.
கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவைப் பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப் பணிகள் குறித்து விவாதித்து தீா்மானங்கள் நிறைவேற்றபட உள்ளதால், கிராம சபைக் கூட்டத்தில் அனைத்துத் தரப்பு பொது மக்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.