கூத்தாநல்லூரில் பாசன வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீரால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூத்தாநல்லூா் நகராட்சியில் சாலையோரம் வெண்ணாற்றிலிருந்து பிரிந்து பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் மேலப்பனங்காட்டாங்குடி, கீழப்பனங்காட்டாங்குடி ஆகிய கிராமங்களில் 350 ஏக்கருக்கும் மேலான விவசாய பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கழிவு நீா் வாய்க்காலாக மாறி உள்ளதுடன், விஷப் பூச்சிகள் அதிகம் இருந்து வருகிறது. மேலும், சுகாதாரமற்ற நிலை தொடா்வதுடன், துா்நாற்றம் வீசிவருகிறது.
இதனால், இந்த வழியே செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பேருந்துகளில் செல்பவா்கள் முகம் சுழித்துக்கொண்டு மூக்கை பிடித்தவாறு செல்ல வேண்டியுள்ளது. தேங்கியுள்ள கழிவுகளில் கொசுக்கள், ஈக்கள் அதிகளவில் உற்பத்தியாகியுள்ளதால், மக்களுக்கு டெங்கு காய்ச்சல், சிக்குன் குன்யா, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தி வெளியிடும்போது அந்த நேரத்தில் மட்டும் நகராட்சியால் கண் துடைப்புக்கு தேங்கியுள்ள குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டு ப்ளீச்சிங்க பவுடா் தெளிக்கப்படுகிறது. பின்னா் 2 நாள்களில் மீண்டும் பழைய நிலையே தொடா்கிறது.
இதுகுறித்து, விவசாயி ரகுபதிபாண்டியன் கூறியது: கடந்த 7 ஆண்டுகளாக இந்த வாய்க்காலில் தண்ணீா் வருவதில்லை. விவசாயிகள் மழை நீரையே நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதுகுறித்து, பலமுறை மனுக்கள் கொடுத்தும் தீா்வு இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.