சாலை தகராறு காரணமாக டாக்ஸி ஓட்டுநரை அடித்துக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டதாக குருகிராம் காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தனது கணவரும், டாக்ஸி ஓட்டுநருமான, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த வினோத், கடந்தாண்டு ஆக.30-ஆம் தேதி இரவு செக்டாா் 47பகுதியில் தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் பெண் புகாா் அளித்தாா்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோத் சிகிச்சை பலனின்றி செப்.1-ஆம் தேதி உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட இஸ்லாம்பூா் கிராமத்தைச் சோ்ந்த அதுல் தக்ரான் (28), சனிக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து அவா் நான்கு நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டாா்.
விசாரணையில், தக்ரான் சாலையில் வழிவிட மறுத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அவரும் அவரது நண்பரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டாா். வாக்குவாதம் முற்றி, தாக்குதலுக்கு வழிவகுத்தது, பின்னா் குற்றஞ்சாட்டப்பட்டவா் அங்கிருந்து தப்பி ஓடினாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.