ஜூலையில் 8 பேருக்கு மலேரியா பாதிப்பு
தில்லியில் ஜூலை மாதத்தில் இதுவரை 8 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிகழாண்டில் இதுவரை மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
தில்லியில் ஜூலை மாதத்தில் இதுவரை 8 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிகழாண்டில் இதுவரை மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தில்லியைப் பொருத்தவரை கொசுக்கள் மூலம் பரவக் கூடிய மலேரியா நோயின் தாக்கம் வழக்கமாக ஜூலை மாதம்தான் ஆரம்பிக்கும். ஆனால், நிகழாண்டில் மலேரியாவின் தாக்கம் பிப்ரவரி மாதமே ஆரம்பித்துவிட்டது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் மலேரியாவின் தாக்கம் குறைவாகக் காணப்பட்டது. ஆனால், மே மாதத்தில் மட்டும் 17 பேரும், ஜூனில் 25 பேரும் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்நோயின் நிகழாண்டு குறைவாக உள்ளது. கிழக்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் மலேரியாவின் தாக்கம் மற்ற இரு மாநகராட்சிகளையும் விட அதிகமாக உள்ளது என்றனர்.
இதுகுறித்து தில்லி அரசு மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறுகையில், "தில்லியில் டெங்கு பாதிப்பை ஒப்பிடும்போது, மலேரியா பாதிப்பு குறைவாகவே எப்போதும் இருக்கும். எனென்றால், இரண்டும் வெவ்வேறு வகையிலான கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. எனினும், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
கை, கால்களை முழுவதுமாக மறைக்கும் வகையில் ஆடைகளை அணிவது, வீட்டுச் சுற்றுப்புறங்களில் கொசுப் பெருக்கம் ஏற்படாத வகையில் பார்த்து கொள்வது. பயன்பாடின்றி இருக்கும் கூலர்களில் உள்ள தண்ணீரை அகற்றுவது போன்ற நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்' என்றார்.
டெங்கு பாதிப்பு: தில்லியில் நடப்பு பருவகாலத்தில் இதுவரை டெங்குவுக்கு 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரியில் 6 பேரும், பிப்ரவரியில் 3 பேரும், மார்ச்சில் ஒருவருக்கும், ஏப்ரலில் இருவருக்கும், மே மாதத்தில் 10 பேருக்கும், ஜூனில் 8 பேருக்கும் , ஜூலையில் இதுவரை 3 பேருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிக்குன்குனியாவுக்கு 19 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த நோய்களால் இதுவரை உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை.
"டெங்கு, சிக்குன்குனியா ஆகிய நோய்களைப் பரப்பும் கொசுக்கள் நன்னீரில் வளரக்கூடியவை. மலேரியாவைப் பரப்பக் கூடிய அனாபிலஸ் வகை கொசுக்கள், நன்னீர் மட்டுமன்றி, கலங்கிய நீரிலும் வளரக் கூடியவை. எனவே, சுற்றுப்புறத்தில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் கொசுப் பெருக்கத்தை தவிர்க்கலாம். 47,213 வீடுகளில் கொசுப் பெருக்கம் உள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 53,137 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது' என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.