முகப்பு
புதுதில்லி

சர்க்கரை மீதான மேல்வரி விதிப்பை கைவிட வேண்டும்: தில்லி கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

சர்க்கரை மீதான மேல்வரி (செஸ்) விதிப்பு திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் ஐந்து மாநில அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் தமிழக அரசு

Updated On : 14 மே, 2018 at 11:50 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

சர்க்கரை மீதான மேல்வரி (செஸ்) விதிப்பு திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் ஐந்து மாநில அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது.
சர்க்கரை மீது மேல்வரி விதிக்க ஜிஎஸ்டியில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, இது குறித்து விவாதித்து அறிக்கையை சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலிடம் அளிக்க அமைச்சர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவில் அஸ்ஸாம், தமிழகம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், கேரளம் ஆகிய ஐந்து மாநிலங்களின் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இக்குழுவின் கூட்டம் அதன் தலைவரும், அஸ்ஸாம் மாநில நிதி அமைச்சருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் தில்லியில் உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக அரசின் மீன்வளத் துறை மற்றும் பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சர்க்கரைக்கு மேல் வரி விதிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு முதலில் தமிழகஅரசுதான் ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து, நிதியமைச்சர் அருண் ஜேட்லி இது தொடர்பாக விவாதிக்க ஐந்து மாநில அமைச்சர்கள் குழுவை அமைத்தார். அக்குழுவில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது.
தமிழக அரசைப் பொருத்தமட்டில் சர்க்கரைக்கு கிலோவுக்கு ரூ.3 வீதம் மேல்வரி (செஸ்) விதிக்கக் கூடாது என்பதுதான்.  ஒரே தேசம், ஒரே வரி முறை' என்று கூறுகிறோம். ஏற்கெனவே ஜிஎஸ்டியில் சர்க்கரைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிலோவுக்கு ரூ. 3 என்ற அளவில் மேல் வரி விதிப்பது என்பது வரி விதிப்பின் நோக்கத்தைக் குலைத்துவிடும்.
திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது, ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு முன்பு இருந்த சர்க்கரை வளர்ச்சி நிதியில் வசூலிக்கப்பட்ட தொகை, எந்தெந்தக் காரணத்திற்காக மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது ஆகியவை குறித்த விவரங்களை மத்திய அரசின் சட்டத் துறை, உணவு வழங்கல், நுகர்வோர் துறை இருந்து பெற்று ஜிஎஸ்டி கவுன்சில் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மும்பையில் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்றார்.
காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழக நலன் கருதி உரிய கருத்துகளை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்தது. தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வரைவு செயல் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசும் சில யோசனகளை அளித்துள்ளது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய சட்ட ஆலோசனை மேற்கொண்டு உச்ச நீதிமன்றதில் 16-ஆம் தேதி தமிழக அரசு தனது பதிலை தெரிவிக்கும். குட்கா' வழக்கில் சிபிஐ விசாரணையை வரவேற்றுள்ளோம். இந்த வழக்கில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யாது என்று ஏற்கெனவே தெரிவித்து விட்டோம்' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.