சிசிடிவி ஊழல் விசாரணை அவசியம்: விஜேந்தர் குப்தா
தில்லியில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக துணை நிலை ஆளுநர் அனில் பஜ்யால் விசாரணை
தில்லியில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக துணை நிலை ஆளுநர் அனில் பஜ்யால் விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என தில்லி சட்டபேரவை எதிர்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை கூறியதாவது: பாஜகவின் தொடர் தேர்தல் வெற்றிகளால் விரக்தியின் விளிம்பில் தில்லி அரசு இருப்பதை துணைநிலை ஆளுநர் இல்லம் நோக்கி கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மியினர் மேற்கொண்ட பேரணி வெளிப்படுத்துகிறது.
சிசிடிவி விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் மீதும், பாஜக மீதும் எவ்வித அடிப்படையும் இல்லாமல் கேஜரிவால் குற்றம் சுமத்தி வருகிறார்.
தில்லியில் ரூ.130 கோடியில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த 2015, அக்டோபரில் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், 2018 ஜனவரியில் அத்திட்டத்தை செயல்படுத்த ரூ. 571 கோடி தேவை என தில்லி அரசு தெரிவித்துள்ளது. இரண்டு வருடம் இரண்டு மாதங்களில் மதிப்பீட்டில் ரூ.441 கோடி அளவுக்கு அதிகரிப்பது எப்படி சாத்தியம்? மேலும், அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்கு முன்னதாக சிசிடிவி பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது. தில்லி அரசின் நிதிச் சட்டங்களுக்கு இது எதிரானது. இது தொடர்பாக தில்லி துணைநிலை ஆளுநர் விசாரணை நடத்த வேண்டும். மேலும், சிசிடிவி கேமராக்களால் மக்களின் தனிநபர் அந்தரங்கம் பாதிக்க துணைநிலை ஆளுநர் அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.