மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது: கோபால் ராய்
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என ஆம் ஆத்மி கட்சியின் தில்லி
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அமைப்பாளரும், தொழிலாளர் துறை அமைச்சருமான கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியில் பள்ளிக் கல்வியை ஆம் ஆத்மி அரசு மேம்படுத்தியுள்ளது. 12-ஆம் வகுப்பு வரை தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பல்கலைக்கழகம் செல்லும்போது எதிர்மறையான சூழல் இருப்பதை மாணவர்கள் உணர்கின்றனர்.
பல்கலைக்கழகத்தில் நேர்மறையான சூழல் உருவாக வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். பொதுத் தேர்தலுக்கு முன் மகா கூட்டணி அமைய வாய்ப்பில்லை. 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது. தேர்தலுக்குப் பின் அமையவுள்ள மகா கூட்டணியில் இடம்பெறுவது குறித்து சூழல்தான் முடிவு செய்யும். மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
மத்தியில் பாஜக அரசை நீக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பாஜகவின் சர்வதிகாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும். தில்லியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பாஜக அரசு அனுமதிக்கவில்லை.
மாறாக தடைகளை ஏற்படுத்தி வருகிறது.
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தில்லி, ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் மட்டும் கவனம் செலுத்துவோம். இந்த மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு உள்ள ஆதரவைக் கொண்டு வெற்றி பெறுவதற்கு முயற்சிப்போம். செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் அகில இந்திய மாணவர் சங்கத்துடன் (ஏஐஎஸ்ஏ) ஆம் ஆத்மியின் மாணவர் அமைப்பான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டக் குழு (சிஒய்எஸ்எஸ்) கூட்டணி சேர்ந்துள்ளது.
பெயருக்குப் பின்னால் சமூகத்தின் பெயரை சேர்த்து பயன்படுத்துவது தனி நபர்களின் தேர்வு. இதில் அரசியல் கட்சி எவ்வித முடிவையும் எடுக்க முடியாது. அரசியல் முடிவுகளுக்கு மட்டும்தான் அரசியல் கட்சிகள் பொறுப்பாக்க முடிமே தவிர, தனிநபர் விஷயங்களுக்கு பொறுப்பாக்க முடியாது.
கட்சியிலிருந்து விலகுவதாக அளித்துள்ள ஆசுதோஷ், ஆஷிஷ் கேதன் ஆகியோரது ராஜிநாமா கடிதங்களை கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் விலகுவதென முடிவு எடுத்துவிட்டதால் கட்சி செய்வதற்கு ஒன்றும் இல்லை. மனம்மாறி அவர்கள் மீண்டும் கட்சிப் பணியாற்ற விரும்பினால் கட்சி அவர்களை வரவேற்கும் என்றார் கோபால் ராய்.
முன்னதாக, தில்லி தமிழ்ச் சங்கத்தில் சிஒய்எஸ்எஸ் சார்பில் "தேசத்தின் குரல்' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அதில் பங்கேற்று கோபால் ராய் பேசுகையில், "ஒரே மத நம்பிக்கை அடிப்படையில் தேசியவாதத்தை கட்டமைக்க சில சக்திகள் முயன்று வருகின்றன. ஆனால் அதுபோன்ற முயற்சிகள் பயங்கரத்தில்தான் முடியும் என்பதை வரலாறு சொல்கிறது. இதற்கு ஹிட்லரை உதாரணமாக கூற முடியும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை ஆம் ஆத்மி உறுப்பினர்கள் பிரமிளா தோகஸ் (ராமகிருஷ்ணாபுரம்), அல்கா லாம்பா (சாந்தினி செளக்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோபால் ராய் தனது அரசியல் பயணத்தை அகில இந்திய மாணவர் சங்கத்தில் (ஏஐஎஸ்ஏ) தொடங்கியது குறிப்பிடத்தக்கது.