புதுதில்லி

இந்தியாவில் இரண்டு நிமிட இடைவெளியில் மூன்று குழந்தைகள் இறப்பு: ஐ.நா. அறிக்கை தகவல்

DIN

குடிநீர்த் தட்டுப்பாடு, சுகாதாரக் குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, அடிப்படை மருத்துவ வசதிகள் குறைபாடு போன்ற காரணங்களால், இந்தியாவில் இரண்டு நிமிடங்களுக்கு மூன்று குழந்தைகள் இறந்து வருவதாக ஐக்கிய நாடுகள்(ஐ.நா.) அவையின் குழந்தை இறப்பு மதிப்பீடு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு மட்டும் 8.02 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர். இதில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் 6.05 லட்சம் பேர். 5 முதல் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் 1.52 லட்சம் பேர் ஆவர். 
இது உலக நாடுகள் அனைத்திலும் காணப்படும் எண்ணிக்கையை விட அதிகமாகும். இருந்தபோதிலும், கடந்த 5 ஆண்டு அறிக்கைகளை ஒப்பிடும்போது, இது இந்தியாவின் குறைந்தபட்ச எண்ணிக்கையாகும். கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 8.67 லட்சமாக இருந்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு, இந்தியாவின் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 44 (1,000 குழந்தைகளுக்கு) ஆக இருந்தது. 2017-ஆம் ஆண்டு, ஆண் குழந்தைகளின் இறப்பு விகிதம் 39 ஆகவும், பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் 40 ஆகவும் உள்ளது. 
தடுக்கப்படக்கூடிய இறப்புகளின் மீது கவனம் செலுத்துவது, வருங்கால இளைஞர்களின் உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பது ஆகியவற்றை அனைத்து நாடுகளும் அடிப்படைக் கொள்கையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதுவே, அந்த நாடுகளின் வளர்ச்சியை அதிகரிக்கும்  என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து, உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் ககன் குப்தா கூறியதாவது: குழந்தைகள் இறப்புக்கான முக்கியக் காரணங்கள் குடிநீர்த் தட்டுப்பாடு, சுகாதாரக் குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, அடிப்படை மருத்துவ வசதிகள் குறைபாடு போன்றவையாகும். குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில், பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலமாக இந்தியா சிறந்த முயற்சிகளை எடுத்து வருகிறது. 
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2.5 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. உலக அளவில் 18 சதவீத குழந்தைகள் இந்தியாவில் பிறக்கின்றன. இந்த நிலையில், குழந்தைகள் இறப்பு விகிதம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது சிறப்பானதாகும். 
மருத்துவமனைகளில் குழந்தை பிறத்தல், சிறப்பு குழந்தைகள் கண்காணிப்பு மையங்கள், சீரான கால இடைவெளிகளில் வழங்கப்படும் நோய்த் தடுப்பு மருந்துகள் போன்ற நடவடிக்கைகளால், இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.  
இந்த நடவடிக்கைகள் மேலும் தொடர வேண்டும் என்று குப்தா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT