கரோல் பாக் விருந்தினர் இல்லங்களில் வர்த்தக நடவடிக்கைகள்: விருந்தோம்பல் துறை பிரதிநிதிகள் குற்றச்சாட்டு
தில்லியில் பாஹர்கஞ்ச் மற்றும் கரோல் பாக் ஆகிய இடங்களில் உள்ள விருந்தினர் இல்லங்களில், ஹோட்டல் போன்று
தில்லியில் பாஹர்கஞ்ச் மற்றும் கரோல் பாக் ஆகிய இடங்களில் உள்ள விருந்தினர் இல்லங்களில், ஹோட்டல் போன்று வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விருந்தோம்பல் துறை பிரதிநிதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தில்லி கரோல் பாக்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அப்ரித் பேலஸ் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும், அதனுடன் தொடர்புடைய முகமைகளும் விசாரணை வளையத்தில் உள்ளன. இந்நிலையில் இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தில்லி ஹோட்டல் மகா சங்கத்தின் தலைவர் அருண் குப்தா கூறியதாவது:
தில்லியில் பாஹர்கஞ்ச், கரோல் பாக் ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 1,000 விருந்தினர் இல்லங்கள் செயல்ப்பட்டு வருகின்றன. பாஹர்கஞ்சில் சுமார் 800, கரோல் பாக்கில் சுமார் 250 விருந்தினர் இல்லங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஹோட்டல் போன்று செயல்பட்டு வருகின்றன. இந்த விருந்தினர் இல்லங்களில் விதிமுறைகளின்படி, வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது. ஆனால், அங்கு வர்த்தக நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை ரெஸ்டாரண்டுகளாகவும், மதுபானக் கூடங்களாகவும் செயல்பட்டு வருகின்றன.
இவற்றுக்கு தவறான வழிமுறைகள் மூலம் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. இந்த உரிமங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே முகமைகள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள், முதலில் தீயணைப்புத் துறையினரிடம் சான்றிதழ் பெற வேண்டும். உள்ளூர் காவல் துறையும், தில்லி அரசின் கலால் துறையும் இந்த இல்லங்களுக்கு அனுமதி வழங்குகிறது. மாநகராட்சியிடமும் சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது என்றார் அவர்.
தில்லி ஹோட்டல் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்தீப் கண்டேல்வால் கூறியதாவது:
தில்லியில் பெரும்பாலான விருந்தினர் இல்லங்கள் மூன்று நட்சத்திர ஹோட்டல் போல செயல்படுகின்றன. இதுபோன்று செயல்படும் ஹோட்ஸ்டல்களில் 90 சதவீதம் விருந்தினர் இல்லங்கள்தான். இவற்றின் பெயர்கள்தான் விருந்தினர் இல்லங்களாக உள்ளன. தற்போது விபத்து நடந்துள்ள அர்பித் பேலஸ் ஹோட்டலின் உரிமையாளர் குடும்ப நிகழ்ச்சிக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். இந்த ஹோட்டல் வங்கிக் கடனை கட்டாததால், கடந்த ஆண்டு டிசம்பரில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. இந்த ஹோட்டலின் முதல் தளம் மதுபானக் கூடமாக செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு உரிமமும் பெறப்பட்டுள்ளது' என்றார் அவர்.
தீயை அணைக்கும் கருவிகளை கையாள ஊழியர்களுக்கு தெரியவில்லை
தியணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், "தீ விபத்து ஏற்பட்ட கரோல் பாக் அர்பித் பேலஸ் ஹோட்டல், தீயணைப்புத் துறையின் ஆட்சேபனை இல்லை சான்றிதழ் பெற்றிருந்தாலும், தீயை அணைப்பதற்கான கருவிகளை கையாளுவதற்கு அதன் ஊழியர்களுக்கு சரிவரத் தெரியவில்லை' என்றனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது: ஹோட்டல் தளங்களில் ஏராளமான மரச்சாமான்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. இதனால், ஹோட்டல் முழுவதும் தீ வேகமாகக் பரவக் காரணமாகிவிட்டது. தீ விபத்து முதலில், முதல் தளத்தில்தான் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தத் தளத்தில் தங்கியிருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கினர். நடைபாதையும் மிகக் குறுகளாக இருந்துள்ளது. இதனால், தப்பித்துச் செல்வதற்காக அனைவரும் ஒரே நேரத்தில் முண்டி அடித்துக் கொண்டு சென்ற போது நெரிசலில் சிக்கியுள்ளனர்.
அந்த ஹோட்டலின் மூன்றாவது, நான்காவது தளத்தில் வெளியேறும் வாயில் மூடப்பட்டிருந்ததும் சாவு எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக இருந்துள்ளது. மேலும், அந்த ஹோட்டலில் தீயணைப்பு சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றைக் கையாளுவதற்கு ஊழியர்களுக்குத் சரிவரத் தெரியவில்லை. ஒரே ஒரு அவசர வாயில் (எக்ஸிட் கேட்) இருந்துள்ளது. அதுவும் மூடப்பட்டிருந்தது.
பொத்தானை அழுத்தினால் தானாக இயங்கும் வகையில் ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதன் ஊழியர்களுக்கு ஜன்னலை திறக்கத் தெரிய வில்லை. அதனால், தீயணைப்பு வீரர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துதான் உள்ளே சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் கடைசி சடலம் மீட்கப்பட்டது. மேலும், அந்த ஹோட்டலில் விளக்கு வசதியும் சரிவர இல்லை. சுவிட்சுகளும் சரிவர இயங்கவில்லை. இதனால், படிகளைக் கண்டுபிடித்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அந்த ஹோட்டலின் அடித் தளத்தில் விதிகளை மீறி உணவகமும் செயல்பட்டுள்ளது என்றனர்.